மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டியதால் விபத்து வாலிபருக்கு 3 மாதம் ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
விபத்து
மும்பை அந்தேரி மேற்கு டி.என். நகரில் உள்ள ஒரு சாலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விக்ரம் ஜவேரி(வயது53) என்பவர் தனது மகனுடன் சாலையை கடந்து கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விக்ரம் ஜவேரி மீது மோதியது.
இதில், அவர் சாலையில் சுமார் 30 அடி தூரம் வரையிலும் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து செல்லப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் குணமானார்.
3 மாதம் ஜெயில்
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய குர்லாவை சேர்ந்த இசாஜ் சேக்(25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இஜாஜ் சேக்குக்கு எதிராக போக்கு வரத்து போலீசார் உள்பட பலர் சாட்சியம் அளித் தனர்.
இதில், அவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், இசாஜ் சேக்குக்கு 3 மாத ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மேலும் அபராத தொகையை விபத்தில் பாதிக்கப்பட்ட விக்ரம் ஜவேரிக்கு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.