பேரிடர் பாதிப்புகளை பார்வையிடாமல் : ‘தமிழக மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு’ - வேல்முருகன் குற்றச்சாட்டு

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி தனியார் தோட்டத்தில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அனைவரையும் வரவேற்றார்.

Update: 2018-11-25 22:30 GMT
கீரனூர், 


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு, இலங்கை தமிழர்களின் விடுதலைக்காக பிரபாகரன் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து பேசினர். அதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து, உணவுக்காக சாலையோரங்களில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பேரிடர் பாதிப்புகளை பார்வையிடவோ, தமிழக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவோ மத்திய அரசின் பிரதிநிதிகள் இதுவரை தமிழகத்துக்கு வரவில்லை.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது உடனே ஓடிச்சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பாதிப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தமிழகத்துக்கு வரவில்லை. இது தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றே எண்ண தோன்றுகிறது. மத்திய அரசின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.

எனவே விரைவில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து பார்வையிடுவதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். தமிழக மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை தமிழக வாழ்வுரிமை கட்சி தோழமை கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். அத்துடன் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரை விடுதலை செய்ய ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பரிந்துரை செய்துள்ளார்.

அதே போல், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை ஆளுனர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக ஆளுனர் செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது. எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுனர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்