கடைகளை திறந்து வைப்போம்; தொழில் வர்த்தக சங்க பேரமைப்பு அறிவிப்பு
பந்த் போராட்டத்திற்கு ஆதரவில்லை எனவும் இன்று கடைகளை திறந்துவைப்போம் என்று தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முழுஅடைப்பு தேவையற்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் யாராவது கடைகளை அடைக்க வலியுறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வர்த்தக அமைப்பினரையும் அவர் அழைத்து பேசினார்.
இந்தநிலையில் புதுவை மாநில தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் ராஜவேல், செய்தி தொடர்பாளர் சதாசிவம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சில அரசியல் கட்சிகள் சார்பாக இன்று புதுவை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை பார்க்கும்போது தேவையற்ற நேரத்தில், தேவையற்ற இடத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
கஜா புயலின் தாக்கத்தினால் வியாபாரம் முடங்கிப்போயிருக்கும் இந்த சூழலில் புதுவை மாநில வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு புதுவை மாநில தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவதில்லை என்பதோடு வியாபாரிகள் அனைவரும் தங்களின் கடைகளை திறந்துவைப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.