நாமக்கல்லில் காலை 8 மணி வரை நீடித்த பனிமூட்டம் பொதுமக்கள் அவதி
நாமக்கல்லில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை நீடித்த பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆங்காங்கே பரவலாக சாரல்மழை பெய்து வந்தது. இந்த சாரல்மழை நேற்று முன்தினம் நின்று விட்ட நிலையில் நேற்று அதிகாலை முதலே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக நாமக்கல் நகரில் நேற்று காலையில் பனிமூட்டம் புகைப்போல காட்சி அளித்தது. இதனால் அருகே செல்லும் நபர்கள் கூட தெரியவில்லை. இந்த பனி காரணமாக அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்லும் நபர்கள் தலையில் குல்லா வைத்து கொண்டும், ஸ்வெட்டர் அணிந்தும் செல்வதை காண முடிந்தது.
வாகன ஓட்டிகள் காலை 7.30 மணிக்கு கூட முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி செல்வதை பார்க்க முடிந்தது. காலை 8 மணி அளவில் சூரியனின் கதிர்கள் வெளியே வர தொடங்கியதால், பனிமூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தது. இந்த பனியின் காரணமாக நேற்று காலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வடக்கு கிழக்கு பருவமழை தற்போது தான் தொடங்கி உள்ளது. அதற்குள் பனிமூட்டம் வருவதால் இனி மழை பெய்யுமா ? என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.