ஓசூரில் லாரி சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி தந்தை கண் முன்னே பரிதாபம்
ஓசூரில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தந்தையின் கண் முன்னே குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஓசூர்,
ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சண்முகம் (வயது 28). கியாஸ் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மகன் கிஸ்வந்த் (வயது 3). சம்பவத்தன்று சண்முகம் தனது மோட்டார்சைக்கிளில் மகன் கிஸ்வந்த்துடன் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் கோவிந்த அக்ரஹாரம் எழில் நகர் அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. அப்போது கிஸ்வந்த் லாரியின் சக்கரத்தில் சிக்கினான். அந்த நேரம் அவன் மீது லாரியின் பின்புறம் சக்கரம் ஏறியது.
இதில் உடல் நசுங்கி கிஸ்வந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். தனது கண் முன்பு மகன் பலியானதை கண்டு சண்முகம் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான கிஸ்வந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.