நாமக்கல்லில் வகுப்பறையில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
நாமக்கல் தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
திருச்சி மாவட்டம் துறையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் அம்பிகானந்தன் (வயது 15). இவன் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் விடுதியில் அம்பிகானந்தனுடன் தங்கி இருந்த சக மாணவர்கள் விளையாட சென்றனர்.
அவர்களிடம் வகுப்பறைக்கு சென்று புத்தகத்தை எடுத்து வருகிறேன் என கூறி விட்டு அம்பிகானந்தன் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது அங்கு மாணவன் அம்பிகானந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அம்பிகானந்தனின் பெற்றோர் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து மாணவனின் தந்தை ராமமூர்த்தி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.