பெரணமல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பரிதாப சாவு மனைவி, பேரன் படுகாயம்
பெரணமல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் பேரன் படுகாயம் அடைந்தனர்.
சேத்துப்பட்டு,
பெரணமல்லூரை அடுத்த மேல்மட்டை கிராமத்தை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி ராணி (45). இவர்களது பேரன் சீனிவாசன் (5). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நெடுங்குணம் அருகே மலை மாதா கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் விக்ரமன், ராணி, சீனிவாசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அங்கிருந்து ராணியும், சீனிவாசனும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் சரவணன் (38) என்பவரை கைது செய்தனர்.