படகுகளை இழந்த நாங்கள் மீண்டும் கடலுக்கு செல்வோமா? - தஞ்சை மாவட்ட மீனவர்கள் கண்ணீர்

படகுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், மீண்டும் நாங்கள் கடலுக்கு செல்வோமா? என்று தஞ்சை மாவட்ட மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

Update: 2018-11-24 22:59 GMT
சேதுபாவாசத்திரம்,

‘கஜா’ புயல் மீனவர்களின் படகுகளை முற்றிலும் சேதமடைய செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், வீடுகள் கடும் சேதம் அடைந்து, மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாக இழந்து உள்ளனர். மீனவ கிராமங்களில் மீளா துயரத்தை ஏற்படுத்தி உள்ள புயல், மீன்பிடி தொழிலை மட்டுமின்றி, அதை சார்ந்து தொழில் செய்யக்கூடிய மீன் வியாபாரிகள், ஐஸ் கட்டி தொழிற்சாலைகள், மீன் ஏற்றுமதி தொழிலாளர்கள், கருவாடு வியாபாரிகள், உப்பு வியாபாரிகளையும் பாதிப்படைய செய்து உள்ளது. படகுகள் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதால், மீண்டும் கடலுக்கு செல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியாகி விட்டதாக மீனவர்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நலச்சங்க மாநில செயலாளர் தாஜுதீன் கூறியதாவது:-

கடந்த 12 நாட்களாக நாங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாங்கள், கடலுக்கு செல்வதற்கு இன்னும் எத்தனை மாதங்களாகும் என்பதை சொல்ல முடியாது. 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விட்டோம்.

புயல் கோர தாண்டவம் ஆடியதில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 248 விசைப்படகுகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் சேதம் அடைந்து உள்ளன இதுதவிர வீடுகளுக்கும் பலத்த சேதம்.

எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மீன்பிடி தொழில் ஒன்று தான் தெரியும். புயலால் சேதமடைந்துள்ள படகுகளை சீரமைத்து கடலுக்கு சென்றால் பெரும் ஆபத்து ஏற்படும். இன்றைய காலகட்டத்தில் மரக்கட்டைகள் மூலமாக விசைப்படகுகளை செய்பவர்கள் மிகவும் குறைவு.

எனவே அரசு உடனடியாக புதிய விசைப்படகுகளை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். தஞ்சையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்