ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடந்தபோது பஸ் மீது ரெயில் மோதல்; 6 பேர் படுகாயம்
சான்பாடாவில், ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடந்தபோது மாநகராட்சி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை,
சான்பாடாவில், ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடந்தபோது மாநகராட்சி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்
நவிமும்பை சான்பாடாவில் நேற்று காலை மாநகராட்சி பஸ் ஒன்று அங்குள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றது. அப்போது பன்வெலில் இருந்து வசாய் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, முன்னால் இன்னொரு வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் அவரால் பஸ்சை வேகமாக எடுக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன பயணிகள் கூச்சல் போட்டனர். உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பலர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர்.
அதே நேரத்தில் தண்டவாளத்தின் குறுக்கே பஸ் நிற்பதை கவனித்து ரெயிலை இயக்கிய மோட்டார் மேன் அவசர பிரேக் பிடித்து ரெயிலின் வேகத்தை குறைத்தார்.
பஸ் மீது ரெயில் மோதியது
இருப்பினும் ரெயில் பஸ் மீது மோதி சில மீட்டர் தூரம் போய் நின்றது. இந்த விபத்தில் பஸ்சின் ஒரு பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் மேன் ரெயிலின் வேகத்தை குறைக்க பிரேக் பிடிக்காமல் இருந்து இருந்தால் இந்த விபத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தின் குறுக்கே நின்ற பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.