ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியுள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதுவரை விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. வங்கி அதிகாரிகள் கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு தினம், தினம் நோட்டீசு அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர். விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர். வங்கி அதிகாரிகள் விவசாயிகளுக்கு புதிதாக கடன் கொடுக்கவும் மறுத்து வருகிறார்கள். இதனால் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். இந்த கூட்டணி அரசு மாநிலத்தில் உள்ளதா? என மக்கள் நினைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு கொடுத்த எந்த விதமான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பூர்த்தி செய்யவில்லை. அரசு அறிவித்த திட்டங்கள், திட்டங்களாகவே உள்ளன. எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்த 6 மாதங்களில் கூட்டணி அரசு எந்த சாதனைகளையும் செய்யவில்லை. 6 மாதங்களாக மோசமான ஆட்சியை தான் கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்துள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட...
கர்நாடக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி அரசிடம் பா.ஜனதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயங்குகிறது. எனனே அரசு உடனடியாக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில், இந்த கூட்டணி அரசின் தோல்விகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பேசுவேன். அரசின் தோல்விகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது பா.ஜனதாவின் பொறுப்பாகும். முதல்-மந்திரி குமாரசாமி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து அரசை வழிநடத்தி செல்கிறார். இதுபோன்று எந்த ஒரு முதல்-மந்திரியும் ஓட்டலில் தங்கி இருந்து அரசை வழிநடத்தி சென்றதில்லை. அதனால் விதானசவுதாவில் இருந்து அரசை வழிநடத்தும்படி குமாரசாமியிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பெலகாவியில் அடுத்த மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதால் வருகிற 29-ந் தேதி பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.