தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது கார்-44 பவுன் நகை பறிமுதல்

திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 44 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-11-24 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கடந்த மாதம் அருளானந்தம் என்பவர் வீட்டில் 70 பவுன் நகைகள் ரூ.8 லட்சம் கொள்ளை போனது. அதேபோல் சீலப்பாடியில் சரஸ்வதி என்பவர் வீட்டில் 4 பவுன் நகை திருட்டு போனது. இதையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையில் 3 கடைகளில் ஒரே நாளில் திருட்டு நடந்தது. இதற்கடுத்த சில நாட்களில் நல்லமநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா, வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், தயாநிதி, ரவுடிகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் முள்ளிப்பாடியை அடுத்த செட்டியப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்த சார்லஸ் ஜெயசீலன் (வயது 21), என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த மணிகண்டபிரபு (20), வேடபட்டியை சேர்ந்த தவமணிராஜா (20), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த குகணேஸ்வரன் (24) என்பதும், திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேடபட்டியை சேர்ந்த சுரேஷ்பாபு (22), செந்தில்குமார் (25), பாரதிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார், 44 பவுன் நகைகள், செல்போன், தராசு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்