ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம்; கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம்

மானாமதுரை அருகே கீழப்பசலையில் தரமற்ற ரேசன் அரிசியை இறக்க வந்த லாரியை சிறைபிடித்து கிராமமக்கள் பேராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-24 23:30 GMT

மானாமதுரை,

மானாமதுரை நுகர் பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து சுற்று வட்டார கிராமங்களில் உள்ள 135 ரே‌ஷன் கடைகளுக்கு ரே‌ஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மதியம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து கீழப்பசலை மற்றும் கரிசல்குளம் கிராம ரேசன் கடைகளுக்கு அரிசி, சீனி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. இதில் கீழப்பசலை கிராமத்தில் முதல் பத்து மூடை ரேசன் அரிசியை இறக்கி வினியோகம் செய்தனர்.

அதில் ரே‌ஷன் அரிசி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதுடன், கருப்பு நிற அரிசியும் அதிக அளவில் கலந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கடை விற்பனையாளரிடம் கேட்ட போது எவ்வித பதிலும் கூற மறுத்துவிட்டாராம். மேலும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, இலவசமாக வழங்கப்படும் அரிசி அப்படி தான் இருக்கும் என்று அலட்சியமாக பதில் கூறப்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியில் இருந்து மீதமுள்ள அரிசி மூடைகளை இறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரே‌ஷன்கடையில் இறக்கப்பட்ட அரிசி மூடைகளை மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டு குடோனிற்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:– கடந்த 6 மாதமாக தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதை சமைக்கும் போது ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. அரிசி சாதமாக சுமார் 5 மணி நேரம் ஆகியும், அதை சாப்பிட்ட உடன் வாந்தி ஏற்படுகிறது. இதை ஆடு, மாடு, கோழிகளுக்கு போட்டால் அவைகளும் சாப்பிடுவதில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தரமான அரிசியும், பொருட்களும் ரே‌ஷன்கடைகளில் வழங்கப்பட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்