மத்திய அரசு தாராளமாக தமிழகத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் - ப.சிதம்பரம் அறிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, மத்திய அரசு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் தெரிவித்தார்.

Update: 2018-11-24 22:15 GMT

காரைக்குடி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கஜா புயலின் பாதிப்புக்களை பார்வையிடுவதற்கு நம்முடைய வேண்டுகோளை ஏற்று மத்தியக்குழு நேற்று வந்திருப்பதை வரவேற்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், அறந்தாங்கி வட்டம் ஆகிய பகுதிகளை நான் பார்வையிட்டேன். கஜா புயலின் சீற்றத்தினால் அந்தப்பகுதிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இதேபோல மற்ற மாவட்டங்களில் புயலின் பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது என்பதை உணரமுடிகிறது. புயல் நிவாரணமாக மத்திய அரசு தாராளமாக மாநில அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சவுக்கு ஆகிய பயிர்கள் மிகக் சேதமடைந்துள்ளன. இவைகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். தென்னை மரங்களை கணக்கெடுக்கும் போது விழுந்த மரங்களை மட்டும் கணக்கெடுத்தால் போதாது. குருத்து சரிந்த தென்னை மரங்களும் பயனற்றுப்போய்விட்டன. அவற்றையும் கணக்கெடுக்க வேண்டும். தென்னைக்கு இழப்பீடு அறிவித்துள்ள தொகை போதாது. குறைந்த பட்சம் ஒரு தென்னை மரத்துக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்.

ஓட்டு வீடு, கூரைவீடு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் கணக்கெடுத்து இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்களும், கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜவுளிக்கடை, பலசரக்குக்கடை, உணவு விடுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன அவற்றையும் கணக்கெடுத்து, மீண்டும் தொழிலைத் தொடங்குவதற்கு உதவி செய்ய வேண்டும்.

கஜா புயல் அடித்து ஓய்ந்தவுடன் உடனடி நிவாரணப் பணிகள் முனைப்புடன் நடந்தன. அந்த முனைப்பும் வேகமும் தற்போது குறைந்துவிட்டன என்று மக்கள் கருதுகிறார்கள். மின்வாரியத்துறை பணியினை மக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள். ஆனால் வருவாத்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் பணிகள் மந்தமாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க்கடனை அடைக்க முடியாது. அவர்களுக்கு எந்த வகையில் அரசு உதவப்போகிறது என்பது தெரியவில்லை. பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கை என்பதை அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஏராளமான மக்களிடம் பேசியதன் அடிப்படையில் மேற்சொன்ன விசயங்களை மத்திய, மாநில அரசுகள் பரிவுடன் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்