மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்: மலைப்பகுதி போலீஸ் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தையொட்டி மலைப்பகுதி போலீஸ் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2018-11-24 22:45 GMT

தாளவாடி,

கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 24–ந் தேதி நக்சல் தடுப்பு போலீசாரால் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24–ந் தேதி மாவோயிஸ்டுகள் போலீஸ் நிலையங்களை தாக்க கூடும் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று தாளவாடி மலைப்பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

தமிழகம் கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூர், தாளவாடி மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூர், பவானிசாகர் போலீஸ் நிலையங்களிலும் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாநில எல்லை பகுதியில் உள்ள உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்களில் ஏறி நின்றும் நக்சல் தடுப்பு போலீசார் கண்காணித்தனர். இதுமட்டுமின்றி பண்ணாரி, ஆசனூர், கேர்மாளம், தாளாவடி, தலமலை, தெங்குமரஹடா சோதனை சாவடிகளிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

மேலும் செய்திகள்