தாளவாடி அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம்

தாளவாடி அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-11-24 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை இக்கரை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 25). இவர் ஆசனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக திம்பம் பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பெஜலட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். உடனே அவருடைய மோட்டார்சைக்கிளில் ராமு ஏறி சென்றார். மோட்டார்சைக்கிளை வடிவேல் ஓட்டினார். அவருக்கு பின்னால் ராமு உட்கார்ந்திருந்தார்.

மாவநத்தம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ரோட்டோரம் காட்டு யானை நின்று கொண்டிருந்தை 2 பேரும் கவனிக்கவில்லை. யானையின் அருகில் மோட்டார்சைக்கிள் சென்றபோதுதான் அதன் விளக்கு வெளிச்சத்தில் யானை 2 பேரும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ராமு அப்படியே மோட்டார்சைக்கிளில் இருந்து குதித்துவிட்டார். வடிவேல் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். மோட்டார்சைக்கிளில் இருந்து ராமு குதித்தபோது ரோட்டில் விழுந்துவிட்டார். அவரால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இதை பார்த்த யானை ஓடி வந்து ராமுவை காலால் எத்தியது. இதில் அவர் ரோட்டோர குழியில் விழுந்தார். பின்னர் அந்த யானை அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதற்கிடையே வடிவேல் மாவநத்தம் சென்று அங்கிருந்த கிராம மக்களை அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தார். அப்போது ரோட்டோர பள்ளத்தில் படுகாயத்துடன் ராமு முனங்கியபடி கிடந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்