கடன் வாங்கி தருவதாக கூறி என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.16½ லட்சம் மோசடி 5 பேருக்கு வலைவீச்சு

கடன் வாங்கி தருவதாக கூறி என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-24 23:15 GMT
சூரமங்கலம், 

சென்னையை சேர்ந்தவர் குமரகுருபரதாஸ் (வயது 42). என்ஜினீயரான இவர் புதிய தொழில் தொடங்குவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த புரோக்கர் துரைராஜ் என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம், கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மூலம் உங்களுக்கு கடன் வாங்கி தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து சுரேஷ்குமாரை, குமரகுருபரதாஸ் திருச்சியில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ரூ.1 கோடி வரை வீட்டு கடன் வாங்கி தருவதாகவும், இதற்காக பத்திரப்பதிவு உள்ளிட்ட செலவுக்காக ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனிடையே சுரேஷ் குமார், குமரகுருபரதாசின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பணத்தை வாங்குவதற்காக சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்தார்.

அதன்பேரில், கடந்த மாதம் 15-ந் தேதி அவர் தனது உறவினர்கள் சிலருடன் அவர்கள் கூறிய தங்கும் விடுதிக்கு சென்றார். அப்போது அந்த விடுதியில் சுரேஷ்குமார் உள்பட 5 பேர் இருந்தனர். இதையடுத்து அவர்கள் குமரகுருபரதாசிடம் இருந்து ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை பெற்று கொண்டனர். ஆனால் அவர் கேட்ட பணத்தை சுரேஷ்குமார் தரப்பினர் கொடுக்காமல் சில காரணங்களை கூறி சமாளித்துவிட்டு அங்கிருந்து நைசாக தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து சுரேஷ்குமார் செல்போன் எண்ணுக்கு குமரகுருபரதாஸ் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சுரேஷ்குமார், ஆனந்தி, கவுதமன், சிவன், துரைராஜ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம்(56). இவர் அந்த பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சுரேஷ்குமார் மற்றும் அவருடைய கூட்டாளியினர் ரூ.4 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.

நித்தியானந்தத்திடம் அந்த மோசடி கும்பல் குமரகுருபரதாசை ஏமாற்றிய அதே நாளில், அதே தங்கும் விடுதியில் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி உள்ளனர். இதுதொடர்பாகவும் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதே மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தை தொழில் அதிபரிடம் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தை ஏமாற்றியது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்