தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிற்கு யானைகள் விரட்டியடிப்பு
தேன்கனிக்கோட்டை அருகே கொட்டும் மழையில் நொகனூர் காப்பு காட்டிற்கு யானைகள் விரட்டியடிக்கப்பட்டன.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, சானமாவு காடுகளில் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ராகி, துவரை, அவரை, பீன்ஸ், தக்காளி, முட்டைக்கோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
கடந்த 21-ந் தேதி ஓசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள். பேவநத்தம் வனப்பகுதியையொட்டி உள்ள சூரப்பன்குட்டை பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனவர்கள் கதிரவன், முருகேசன், மற்றும் 20 பேர் கொண்ட குழுவினர் பட்டாசுகள் வெடித்து விரட்டினார்கள்.
திம்மசந்திரம், மாரசந்திரம், லக்கசந்திரம், சீனிவாசபுரம், பூதுகோட்டை, மரக்கட்டா ஆகிய கிராமங்கள் வழியாக வந்த யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி மரக்கட்டா நொகனூர் காட்டிற்கு சென்றன. இந்த நிலையில் அங்கிருந்து இந்த யானைகள் ஆலள்ளி காட்டிற்கு சென்றன.
இதைத் தொடர்ந்து கொட்டும் மழையில் இந்த யானைகளை நொகனூர் காப்பு காட்டிற்கு வனத்துறையினர் விரட்டினார்கள். யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கே அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.