தொடர் கடல் சீற்றம் எதிரொலி: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 11-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

தொடர் கடல் சீற்றம் எதிரொலியாக பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் நேற்று 11-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-11-23 23:08 GMT
பரங்கிப்பேட்டை,

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதற்கிடையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவிர கடல் காற்றும் அதிகமாக வீசி வருகிறது.

இதையொட்டி பரங்கிப்பேட்டை முடசல்ஓடை, அன்னங்கோவில் ஆகிய பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, பேட்டோடை, முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர். திட்டு, கூழையாறு, சூர்யாநகர், சின்னவாய்க்கால் உள்பட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்றோடு 11 -வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீனவர்கள் தங்களுடைய 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் முடசல் ஓடை மீன் ஏலம் விடும் தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் கடல் சீற்றம் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றமாக இருந்ததால் அக்கரைக்கோரி, சோனாங்குப்பம் ஆகிய கடற்கரையோர பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கஜா புயல் காரணமாக 6 நாட்கள் மீன்பிடி தொழில் முடங்கி இருந்தது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று 3-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ் கட்டி தொழிற்சாலையும் முடங்கியுள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகம் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.


மேலும் செய்திகள்