அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்து உடலை வீசிய கிணற்றை அடையாளம் காட்டிய கொலையாளி: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்
அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்து உடலை வீசிய கிணற்றை கொலையாளி அடையாளம் காட்டினார். அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.
கோவை,
கோவைக்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த தூத்துக்குடி ஏரலை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகரான ஜெயவேணு காணாமல் போன வழக்கில் 50 நாட்களுக்கு பிறகு அவரது உறவினரும் நண்பருமாகிய ராஜேஷ் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
ராஜேஷ் தனது வாக்கு மூலத்தில், ஜெயவேணுவை மது போதையில் சுத்தியலால் தலையில் அடித்து கொன்று, துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக தெரி வித்தார். கிணற்றில் வீசப்பட்ட ஜெயவேணு உடலை தேடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலையாளி ராஜேசை போலீசார் காவலில் எடுத்தனர். பின்னர் அவரை உடலை வீசிய கிணற்றை அடையாளம் காட்டுவதற்காக சம்பவ இடத் துக்கு அழைத்து வந்தனர். அப்போது ஜெயவேணுவின் உறவினர்கள் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராஜேஷ் துப்பாக்கி ஏந்திய போலீசாரால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவை வடக்கு தாசில்தார் சிவக்குமார், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவர் ஜெயசிங் முன்னிலையில் குற்றவாளி ராஜேஷ், கொலை செய்து ஜெயவேணுவின் உடலை வீசிய கிணற்றை அடையாளம் காட்டினார்.
அதைத்தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இருவர் கிணற்றுக்குள் இறங்கினர். அவர்கள் தொடர்ந்து 5 மணி நேரமாக தேடியும் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் ஜெயவேணுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் போலீசார் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று புகார் கூறி அழுதனர். அவர்களிடம், அவர், உங்களுக்கு உரிய பாதுகாப்பும், விரைவில் ஜெயவேணுவின் உடலை மீட்க நடவடிக்கையும் மேற்கொள்கிறோம் என்றார்.