பெலகாவியில் கரும்பு விவசாயிகளின் போராட்டம் வாபஸ் மந்திரி டி.கே.சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
நிலுவைத்தொகையை வழங்க கோரி பெலகாவியில் போராட்டம் நடத்தி வந்த கரும்பு விவசாயி களுடன் மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெங்களூரு,
நிலுவைத்தொகையை வழங்க கோரி பெலகாவியில் போராட்டம் நடத்தி வந்த கரும்பு விவசாயி களுடன் மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
குமாரசாமி திரும்ப பெற்றார்
சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், கரும்புக்கு நியாயமான ஆதரவு விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பெலகாவியில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் அங்குள்ள சுவர்ண சவுதாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
பெண் விவசாயி ஒருவர், குமாரசாமியை கடுமையாக விமர்சித்தார். அதற்கு குமாரசாமி, அந்த பெண் விவசாயி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். குமாரசாமியின் இந்த பேச்சை கண்டித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெண் விவசாயி பற்றிய கருத்தை குமாரசாமி திரும்ப பெற்றார்.
காலவரையற்ற போராட்டம்
இருப்பினும் கரும்பு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 4 நாட்களாக பகல்-இரவாக காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று இந்திய விவசாயிகள் சமூக தலைவர் சித்தனகவுடா மொதகி, நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதற்கிடையே சர்க்கரை ஆலை அதிபர்களுடன் குமாரசாமி கூட்டம் நடத்தினார். அடுத்த 15 நாட்களுக்குள் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் கரும்பு டன்னுக்கு ரூ.300 ஆதரவு விலை வழங்க குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், நேற்று பெலகாவிக்கு சென்றார். அங்கு போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கு பேசிய டி.கே.சிவக்குமார், “நான் முதல்-மந்திரி சார்பில் உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக குமாரசாமி உறுதியளித்துள்ளார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. அதை தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் யாரும் சட்டத்தை ைகயில் எடுக்க வேண்டாம். உங்களின் பிரச்சினைகளை முதல்-மந்திரி தீர்த்து வைப்பார். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தற்காலிகமாக வாபஸ்
மந்திரி டி.கே.சிவக்குமார் வழங்கிய இ்ந்த உறுதிமொழியை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர். 15 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கெடு விதித்தனர்.
இந்த 15 நாட்களுக்குள் பிரச்சினையை தீர்க்காவிட்டால், மீண்டும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் மூலம் பெலகாவியில் விவசாயிகள் நடத்தி வந்த காலவரையற்ற தர்ணா போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.