‘அழிந்துபோன கோடியக்கரை சரணாலயம்’ - மனிதர்கள், மரங்களை மட்டுமல்லாது விலங்குகளையும் விட்டு வைக்காத ‘கஜா’

கஜா புயலின் கடும் தாக்குதலால் கோடியக்கரை சரணாலயம் அழிந்து விட்டது என்று கூறும் அளவிற்கு கடும் சேதம் அடைந்துள்ளது. அங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகளைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. மனிதர்கள், மரங்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை.

Update: 2018-11-23 21:45 GMT
வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் உள்ள பகுதி 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த சரணாலயத்தின் தொடக்கத்தில் ராமர் பாதம் தொடங்கி 36 சதுர கிலோமீட்டரில் மரங்களும், செடிகளும், கொடிகளும் காணப்பட்டன.

பசுமை நிறைந்த இந்த பகுதியில் மான்கள், நரி, ஒட்டகம் முயல், குரங்குகள் போன்ற பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளை காண்பதற்காக சாலை ஓரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று அங்கு உள்ள விலங்குகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை தொடங்கி வேதாரண்யம் வரை அனைத்து கிராமங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. கஜா புயலானது மனிதர்கள், மரங்களை மட்டுமல்ல விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், பறவைகளை பார்ப்பதற்கு இரும்பினாலான கண்காணிப்பு கோபுரம் மற்றும் கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த கட்டிடம் புயலுக்கு கடுமையான சேதம் அடைந்து இடிந்து தரைமட்டமாகி உள்ளது.

விலங்குகள் சரணாலயத்தை பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்துக்கு செல்ல முடியாத அளவிற்கு மரங்கள் முறிந்து காணப்படுகின்றன. மேலும் இந்த காடு முழுவதும் மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தும், வேரோடு சாய்ந்தும் சரணாலயம் அழிந்து விட்டது என்று கூறும் அளவிற்கு கடுமையான சேதமடைந்து காணப்படுகின்றன.
கஜா புயலுக்குப் பிறகு இங்கு பார்வையாளர்கள் வருகை முற்றிலும் நின்று விட்டது. இதனால் இந்த காட்டில் இருந்த குரங்குகள் அனைத்தும் சாலைக்கு வந்து யாராவது நமக்கு உணவு தருவார்களா? என்ற ஏக்கத்துடன் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.

இந்த வனவிலங்கு பகுதிகளில் 900-க்கும் அதிகமான மான்கள் இருந்தன. கஜா புயலுக்கு 100-க்கும் மேற்பட்ட மான்கள் இறந்து கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்கின. மற்ற மான்கள் விலங்குகள் சரணாலயத்தில் சுற்றித்திரிகின்றன.
பறவைகள் சரணாலயம் கடும் சேதம் அடைந்து இருப்பதால் இங்கு பறவைகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்த அளவுக்கு பறவைகள் இந்த சரணாலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து விட்டன. வாய்மேடு பகுதியில் புயலுக்கு ஏராளமான பறவைகள் இறந்து காணப்படுகின்றன.

சரணாலயத்தில் உள்ள மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தும், இலைகளை இழந்தும் காணப்படுகின்றன. ஏற்கனவே பெய்த மழை காரணமாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இங்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தண்ணீரில் இறந்து அழுகி கிடக்கும் பறவைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்தப் பகுதிக்கே செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே இந்த சரணாலயத்தை சீரமைத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்