கஜா புயல் பாதித்த பகுதிகளில்: அடாத மழையிலும் விடாது பணியில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் - இடுப்பளவு தண்ணீரிலும் இறங்கி மின்கம்பங்களை நடுகிறார்கள்

கஜா புயலில் சிக்கி ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தற்போது பெய்து வரும் அடாத மழையையும் பொருட்படுத்தாமல் விடாது மின்வாரிய ஊழியர்கள் இடுப்பளவு தண்ணீரிலும் இறங்கி மின்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2018-11-23 22:00 GMT
தஞ்சாவூர்,


கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களில் வீடுகள், தென்னை மரங்கள், மா, பலா, வாழை மரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள ஊர்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மின்கம்பங்களும் சாய்ந்தும், முறிந்தும் உள்ளன.

இதனால் கடந்த 9 நாட்களாக இந்த மாவட்டங்களில் அனைத்து கிராமங்களும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன.

நாகை மாவட்டத்தில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நாகை மாவட்ட மின் ஊழியர்கள் மட்டுமின்றி நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட மின் ஊழியர்களும், வெளிமாநிலத்தை சேர்ந்த மின் ஊழியர்களும் என 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காலை முதல் நாகை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. நாகை முதல் வேதாரண்யம் வரை பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. ஆனால் அடாத மழையையும் பொருட்படுத்தாமல் விடாது மின்வாரிய ஊழியர்கள் இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி மின்கம்பங்கள் அமைப்பதற்காக மண் தோண்டும் பணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு மின் கம்பங்களை நட்டு வருகிறார்கள்.

மின்கம்பங்களில் ஏறி மின்கம்பிகளை கட்டுவது, மின்இணைப்பு வழங்குவது போன்ற பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மின்வாரிய ஊழியர்கள் இந்த பணியை பார்த்த பொதுமக்கள் அவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்