திருப்பூர் மாவட்டத்திற்கு முதலீட்டு இலக்கு ரூ.3 ஆயிரம் கோடி; வணிகத்துறை முதன்மை செயலாளர் தகவல்

திருப்பூர் மாவட்டத்திற்கு முதலீட்டு இலக்கு ரூ.3 ஆயிரம் கோடி என தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை முதன்மை செயலாளர் தெரிவித்தார்.

Update: 2018-11-23 23:00 GMT

திருப்பூர்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் சார்பில், தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு பற்றிய விளக்க கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கந்தசாமி வரவேற்று பேசினார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் ‘‘திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் முதலீட்டு இலக்கை விரைவாகவும், எளிதாகவும் அடைந்து விட முடியும். வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 7ஆயிரத்து 500 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் திருப்பூரில் இருந்து 1,500 கிலோ வாட் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்றார். இதன் பின்னர் வங்கி மற்றும் நிதிக்குழு துணைத்தலைவர் கோவிந்தன், ஏற்றுதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் பேசினர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் அரசுத்துறைகளின் பல்வேறு அனுமதி பெறுவது ஒற்றைச்சாளரமாகியுள்ளது. மேலும், விண்ணப்பம், பரிசீலனை, மானியம், மின்சாரம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படுவதால் சிரமம் குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்கள் மூலமாக தொழில் முதலீடு செய்ய மாவட்ட தொழில் மையம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1,600 கோடி வரை இலக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சிறு, குறு தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் திருப்பூர் சிறந்து விளங்குகிறது.

வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் போட்டி நாடுகளாக உள்ளன. இதனை சமாளித்து திருப்பூர் தொழில்துறையினர் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக எடுத்துச்செல்ல அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், வெற்றி பெற உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்