புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கஜா புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. மேட்டாம்பட்டி, விஜயபுரம் போன்ற பகுதிகள் கடும் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்தனர்.
சிங்கம்புணரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஸ்வரன் ஏற்பாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர், மின்சாரம் இன்றி சிரமமடைந்தனர். மின்சாரம் இல்லாதததால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போனது. எனவே அதன் முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த வேலையில் விஜயபுரம் மற்றும் மேட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு லாரிகளில் கத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிடித்து சென்றனர்.
மேலும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் மெழுகுவர்த்திகள் வினியோகம் செய்யப்பட்டன. பின்பு சிங்கம்புணரி நேதாஜி நகர் ஜெய்ஹிந்த் பாலா, கிழத்தெரு விஜய், சுதாகர் உள்ளிட்ட இளைஞர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.