நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பலத்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை வரை 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 23 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 47 மில்லிமீட்டரும், ராமநதி அணைப்பகுதியில் 33 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
பாபநாசம், சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று காலையில் பலத்த மழை பெய்தது. இதேபோல் மணிமுத்தாறு அணைப்பகுதி, மாஞ்சோலை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணை 100 அடியை நெருங்கி உள்ளதால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
பாபநாசம் அணை
இந்த தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,009.35 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 918 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டு உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 40 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டு உள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 130.41 அடியாகவும், கடனாநதி அணை 74.50 அடியாகவும், ராமநதி அணை 66.25 அடியாகவும், கருப்பாநதி அணை 69.23 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 30.50 அடியாகவும், நம்பியாறு அணை 22.17 அடியாகவும், அடவிநயினார் அணை 98.50 அடியாகவும், கொடுமுடியாறு அணை 42 அடியாகவும் உள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
குற்றாலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் நேற்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் குளித்துச் சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஆய்குடி-55, மணிமுத்தாறு-47, அடவிநயினார் அணை-35, ராமநதி-33, கொடுமுடியாறு-25, சேர்வலாறு-23, கருப்பாநதி-11, தென்காசி-7, சேரன்மாதேவி-7, அம்பை-7, குண்டாறு-5, நாங்குநேரி-4, சிவகிரி-4, நம்பியாறு-3, செங்கோட்டை-2, ராதாபுரம்-2.