100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பர்கூர் ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பர்கூர் மலைப்பகுதி. இங்கு 33 மலைக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக 100 நாட்கள் வேலை திட்டத்தில் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை எனக்கூறி மலைப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒன்று திரண்டு பர்கூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் சங்கத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறுகையில், ‘100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஏழை மலைவாழ் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு வேலையின் அளவை பொறுத்து கூலி வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு நிர்ணயித்து உள்ள தினக்கூலியான ரூ.224–யை வழங்க வேண்டும்,’ என்றார்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘உங்கள் கோரிக்கை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டதுடன், கோரிக்கைகளை மனுவாக எழுதி உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகத்திடம் வழங்கினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.