தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை சாவு

தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது.

Update: 2018-11-23 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றிகள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தவிட்டு சென்றுவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்துவதை தடுக்க விவசாயிகள் பலர் மின் வேலி அமைத்து உள்ளனர்.

இதேபோல் தாளவாடியை அடுத்த கேர்மாளம் அருகே உள்ள சுஜில்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ். விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து பயிர்களை சேதம் செய்வதை தடுக்க மின் வேலி அமைத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு ஆண் யானை ஒன்று அவருடைய விவசாய நிலத்துக்கு வந்து உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின் வேலியில் சிக்கி அது இறந்து விட்டது.

இதுபற்றி அறிந்ததும் கேர்மாளம் வனச்சரகர் முரளி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார். மேலும் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மின் வேலியில் சிக்கி இறந்த யானைக்கு 17 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்