தர்மபுரியில் தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி நகைக்கடை அதிபருக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரியில் தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் நகைக்கடை அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி சூடாமணி தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 46). நகைக்கடை அதிபரான இவர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த தொழிலதிபரான வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கடன் தொகையை 2 மாதங்களில் திருப்பி தந்து விடுவதாகவும் குமார் கூறியுள்ளார். ஆனால் கடன்தொகையை திருப்பி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகவும், பலமுறை கேட்டும் கடனாக பெற்ற பணத்தை குமார் திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த வேலவன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேலவன் தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் இந்த மோசடி புகார் குறித்து விசாரணையை தொடங்கினார்கள். இதைத்தொடர்ந்து நகைக்கடை அதிபர் குமார் மற்றும் அவருடைய மனைவி லீலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.