மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் ரூ.5.19 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடியில் இருந்து மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் ரூ.5.19 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை நேற்று கலெக்டர் சந்தீப்நந்தூரி அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடியில் இருந்து மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் ரூ.5.19 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை நேற்று கலெக்டர் சந்தீப்நந்தூரி அனுப்பி வைத்தார்.
நிவாரண பொருட்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கூட்டுறவு துறை மூலம் ரூ.5.19 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்துகொண்டு, கூட்டுறவுத்துறை மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் பொது நிதி ரூ.5.19 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட கலெக் டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிவாரண பொருட்கள் பெறப்பட்டு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பெட்சீட், பருப்பு வகைகள், பாய், மெழுகுவர்த்தி, போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வருகிறோம். இதுவரை 10 லாரிகளில் ரூ.52 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தின் மூலம் 5 கிரேன் எந்திரங்கள் மற்றும் 10 மரம் வெட்டும் எந்திரங்கள் பணியாளர்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சியின் மூலம் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.5.19 லட்சம் நிவாரண பொருட்கள்
மின்சாரம் இல்லாத பகுதியில் பயன்படுத்திட ஜெனரேட்டர்களையும் அனுப்பி உள்ளோம். தற்போது கூட்டுறவு துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு போர்வை, லுங்கி, துண்டு, நாப்கின், நைட்டி ஆகிய பொருட்கள் ஆயிரம் பைகளிலும் மற்றும் இதர பொருட்களான பாய், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள், தீப்பெட்டி என ரூ.5.19 லட்சம் மதிப்பிலான 9 வகையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் நிவாரண உதவிகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அருளரசு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்- இணை பதிவாளர் இந்துமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.