சந்தோஷத்திலும், வருத்தத்திலும் எலும்பு உடைகிறது: வினோத நோயால் அவதிப்படும் சிறுமி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதி

சந்தோஷத்திலும், வருத்தத்திலும் எலும்புகள் உடைந்து வினோத நோயால் சிறுமி அவதிப்பட்டு வருகிறாள். அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Update: 2018-11-23 18:29 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் பூபதி (வயது 38). சரக்கு வாகன டிரைவர். இவரது மனைவி கிரிஜா (32). இவர்களது ஒரே மகள் தீபிகா (13). இவள் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். தீபிகாவிற்கு எலும்பு உடையும் வினோத நோய் உள்ளது. இரண்டு வயதில் கால் வளைந்து காணப்பட்டதால், எலும்பு முறிவு டாக்டரிடம் காண்பித்த போது அவளுக்கு கால்சியம் குறைபாட்டால் உடம்பில் உள்ள எலும்புகள் உடையும் நோய் இருப்பதாக கண்டறிந்தனர். தொடர்ந்து இதுவரை 8 முறை உடலில் எலும்புகள் உடைந்துள்ளன. இதனால் உடலில் பல்வேறு இடங்களில் ஏழு முறை ஆபரேசன் செய்துள்ளனர். கடந்த வாரம் இடுப்பு எலும்பு உடைந்து புதுச்சேரியில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவளது பெற்றோர் கூறியதாவது:

தீபிகாவிற்கு சின்ன வயதில் இருந்தே எலும்பு உடையும் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக பெங்களூரு, சென்னை மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை அளித்தோம். தற்போது புதுச்சேரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபிகாவிற்கு மிகுந்த சந்தோஷத் திலும், அதிக மனவருத்தம் அடைந்தாலும் எலும்பு உடைவு ஏற்படுகிறது. ஆனால் படிப்பதில், எழுதுவதில் முதல் பரிசு பெற்று வருகிறாள். பல்வேறு பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கினாள். எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால், இந்த நோயை குணப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து எலும்பு முறிவு சிகிச்சை டாக்டரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனருமான டாக்டர் அசோக்குமார் கூறியதாவது:-

இந்த நோய்க்கு “ஆஸ்ட்டியே ஜெனிசிஸ் இம்பெர்பெக்டா” என்று பெயர். இந்த நோய் உள்ள குழந்தைக்கு எலும்பு உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை கால்சியம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டாலும், ஜீன்கள் குறைபாட்டாலும் ஏற்படுகிறது. நமது மாவட்டத்தில் 10 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் சிறிய அளவில் கம்பிகளை வைத்து சாதாரண ஆபரேசன் செய்ய வேண்டும். எலும்பு டாக்டரிடம் மாவு கட்டும் போடலாம். பெண் குழந்தைகளுக்கு 14 அல்லது 15 வயதில் பருவத்திற்கு வரும் போது ஹார்மோன் மாற்றத்தால் இந்த பிரச்சினை படிப்படியாக குறைந்து விடும். ஆண் குழந்தைக்கு 16 அல்லது 17 வயதுக்கு பிறகு இந்த பிரச்சினை குறைந்துவிடும். அதன்பின்னர் ஏற்படும் எலும்பு உடைவிற்கு நிரந்தர அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்த பிரச்சினை உள்ள குழந்தைகளை சூரிய ஒளி படும்படி வெளியில் அமர வைக்க வேண்டும். மேலும் கால்சியம், ஹார்மோன் மாத்திரைகள் மூலமும் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட தீபிகாவுடன் அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி கலெக்டரை நேரில் சந்தித்தனர். சிறுமிக்கு முதல் கட்டமாக ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கி உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் பிரபாகர் உறுதி அளித்தார்

மேலும் செய்திகள்