சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி 15 பேருக்கு தீவிர சிகிச்சை
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி அமுதா (வயது 60). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த 21-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அமுதா பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டியனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி தங்கமணி (46). காய்ச்சலால் அவதியுற்று வந்த இவர் கடந்த 21-ந் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே நேற்று சிகிச்சை பலனின்றி தங்கமணி உயிரிழந்தார்.
மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மர்ம காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.