விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-11-22 22:26 GMT
விழுப்புரம்,

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி நேற்று காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் ரெயில் நிலைய ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது 4-வது நடைமேடையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றதை பார்த்த அவர், உடனே அதை சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பயணிகள் தங்கும் அறையை பார்வையிட்ட அவர், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த அவர் உடனே அவற்றை அகற்றும்படியும், ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார்.

அதன் பிறகு பயணச்சீட்டு வழங்கும் இடத்திற்கு சென்று அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம், திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக இயக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் வசதியாக உள்ளதா? என்று கேட்டறிந்தார். அதற்கு ஒரு சில பயணிகள், இன்னும் கூடுதலாக சிறப்பு ரெயில் இயக்கியிருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

இதனை தொடர்ந்து, ரெயில் நிலைய வளாகத்தினுள் பயணிகளின் வசதிக்காக பஸ்கள் வந்து செல்ல வசதியாக டீசல் பம்பிங் செய்யும் பழைய கட்டிடம் மற்றும் அதன் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்ட கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, இப்பணிகளை இம்மாத இறுதிக்குள்ளாகவே விரைந்து முடித்து ரெயில் நிலைய வளாகத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்