புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் வைகோ பேட்டி

புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தஞ்சையில் வைகோ கூறினார்.

Update: 2018-11-22 23:00 GMT
தஞ்சாவூர்,

‘கஜா’ புயலால் ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்து விட்டன. பல்லாயிரக்கணக்கான எக்டேர் நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு அழிந்துவிட்டன. வாழை, கரும்பு என அனைத்தும் சூறையாடப்பட்டிருக்கிறது. வீடுகளை இழந்து, சாப்பாடு, குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது. இரவு, பகலாக புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களின் பணி மகத்தானது.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவியை தமிழக அரசு வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு, தமிழகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கேட்ட உதவித்தொகையை மத்திய அரசு வழங்குவதே இல்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு விரோதமாக செயல்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று, நிவாரண பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி அவர் செய்து இருந்தால், மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று பார்க்காதது முதல்-அமைச்சர் செய்த மிகப்பெரிய தவறு.

முதல்-அமைச்சர் அவருடைய கடமையை ஆற்றவில்லை. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பிரதமர் மோடி, ‘கஜா’ புயலால் பாதிப்புக்கு உள்ளான தமிழகத்துக்கு ஏன் வரவில்லை?

தென்னை மரங்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்ற அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாய கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றின் வசூலை 5 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

ம.தி.மு.க. சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ரூ.10 லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.15 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில விவசாய அணி செயலாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்