வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 53 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும் பரமேஸ்வர் பேச்சு

வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 53 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-11-22 22:30 GMT
பெங்களூரு, 

வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 53 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பரமேஸ்வர் பேச்சு

பெங்களூருவில் தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தெருவோர வியாபாரிகள் காலையில் கந்துவட்டிக்கு கடன் பெற்று, மாலையில் வட்டியுடன் கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதில் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதி வட்டிக்கே சென்றுவிடுகிறது. இதனால் அந்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

53 ஆயிரம் பேருக்கு கடன்

அதனால் தெருவோர வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. மதுகிரியில் பூக்கள் விற்ற ஒரு பெண், தனது மகனை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்த்தினார். அதனால் ெதருவோர வியாபாரிகள், தாழ்வு மனப்பான்மை இல்லாமல், தங்களின் குழந்தைகளை உயர்கல்வியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலத்தில் 53 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். கூட்டணி அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

நல்லாட்சி நிர்வாகத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் பயன், தகுதியானவர்களுக்கு கிடைக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

மேலும் செய்திகள்