பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து ராமநாதபுரத்தில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-22 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 2017-18-ம் ஆண்டு போதிய மழை இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் மயில்வாகனன், மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சேதுராமு, மாவட்ட துணை தலைவர் முருகேசன், நவநீதகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்புறம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து தங்களின் கோரிக்கை குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து கலெக்டர் உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தினரிடம் தொடர்பு கொண்டு விவசாயிகள் நிலை குறித்து விளக்கி கூறி உடனடியாக காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும், அதற்கான கால நிர்ணய தேதியை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.


மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நடைமுறை விதிகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் 25-ந்தேதிக்குள் கண்டிப்பாக அனைவருக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் இன்சூரன்சு நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். கலெக்டர் வீரராகவ ராவ் எடுத்த உடனடி நடவடிக்கை மற்றும் உத்தரவாதத்தை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்