ஆற்றில் பிணமாக மிதந்தார்: நர்சு உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் சாவில் மர்மம் இருப்பதாக புகார்

குழித்துறை ஆற்றில் பிணமாக கிடந்த நர்சு சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-22 23:00 GMT
களியக்காவிளை,

குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளையை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). இவர் தேங்காப்பட்டணத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

நேற்று முன்தினம் ஸ்ரீஜா குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஸ்ரீஜா அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

அத்துடன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு-களியக்காவிளை சாலையில் பிணத்துடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்