மலை குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
மலை குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகரட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மலை குறவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் கலைக்கூத்தாடி இனத்தை சேர்ந்தவர்கள். எங்களை மலை குறவர்கள் என கூறுவார்கள். எங்களது உறவினர்கள், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள். நாங்கள் கலைக்கூத்தாடி தொழில் செய்வதோடு ஜிம்னாஸ்டிக், சர்க்கஸ் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறோம். முன்பு, தினமும் பல்வேறு ஊர்களுக்கு சென்று தொழில் செய்து வந்தோம். தற்போது அந்த நிலை மாறி, கோபி பெரியகரட்டுப்பாளையத்தில் 915 பேர் கூட்டாக வசித்து வருகிறோம்.
கோபி, அளுக்குளி, காசிபாளையம், பெரியகரட்டுப்பாளையம் போன்ற இடங்களில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் எங்களது குழந்தைகள் படித்து வருகிறார்கள். கோபி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளில், 28 பேர் மாநில -தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் எங்களுடைய குழந்தைகளை சேர்க்கும்போது, மலைக்குறவர் -ஆதிதிராவிடர் என எஸ்.சி. சாதி சான்றிதழ் வழங்கினர். ஆனால் நாகை உட்பட பிற மாவட்டங்களில் வசிக்கும் எங்கள் இனத்தவர்களுக்கு மலைக்குறவர் -பழங்குடியினர் என எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைப்பதில்லை. எனவே எங்களுடைய குழந்தைகளுக்கும் எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ‘இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார்.