புழம்பட்டி-மச்சிக்கொல்லி இடையே: ரூ.30 லட்சத்தில் புதிய தார்ச்சாலை - பொதுமக்கள் மகிழ்ச்சி

புழம்பட்டி-மச்சிக்கொல்லி இடையே ரூ.30 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-11-22 22:00 GMT
கூடலூர்,

கூடலூரில் இருந்து தேவர்சோலை பேரூராட்சி பகுதியான ஒற்றவயல், பாலம்வயல், புழம்பட்டி, மட்டம், மச்சிக்கொல்லி வழியாக தேவர்சோலைக்கு சாலை செல்கிறது. இந்த கிராமங்களை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்கள் அத்தியாவசிய மற்றும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூடலூர் அல்லது தேவர்சோலைக்கு தினமும் சென்று வருகின்றனர்.

மேலும் தினமும் மாணவ- மாணவிகளும் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் காலை, மாலை வேளைகளில் மட்டுமே அந்த வழியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. சரிவர போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் வாழ்வதால் அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள், கர்ப்பிணிகளை தனியார் ஜீப்புகள் மூலம் கொண்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதற்கிடையில் ஒற்றவயல் தொடங்கி பாலம்வயல், புழம்பட்டி வழியாக மட்டம், மச்சிக்கொல்லி வரை செல்லும் சாலையும் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இதனால் காலை, மாலை வேளைகளில் மட்டும் இயக்கப்பட்ட அரசு பஸ் மழைக்காலத்தில் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றது. மேலும் ஆபத்தான இந்த சாலையில் பஸ்சை இயக்கினால் பெரும் விபரீதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சாலையை புதுப்பிக்கும் வரை பஸ் இயக்கப்படாது என்று போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் நிதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. மேலும் பணி தொடங்குவதற்கான டெண்டரும் விடப்பட்டது. இருப்பினும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் அதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து பாலம்வயல் தொடங்கி புழம்பட்டி, மட்டம் வழியாக மச்சிக்கொல்லி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து இன்டர்லாக் கற்களை பதிக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- குண்டும், குழியுமாக பல ஆண்டுகளாக இருந்த சாலையால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இனிவரும் நாட்களில் அரசு பஸ் சேவையும் தொடங்கப்படும். இதன் காரணமாக நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்