சத்துணவு அமைப்பாளர்களுக்கு கலவை சாதம் செய்முறை விளக்க பயிற்சி

தூத்துக்குடியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு கலவை சாதங்கள் தயார் செய்தல் தொடர்பாக செய்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2018-11-22 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு கலவை சாதங்கள் தயார் செய்தல் தொடர்பாக செய்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.

கலவை சாதம்

தூத்துக்குடியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயார் செய்தல் தொடர்பாக செய்முறை விளக்கம் மற்றும் புத்தாக்க பயிற்சி தொடக்க நிகழ்ச்சி, புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு சத்துணவு அமைப்பாளர்களுக்கு கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயார் செய்தல் தொடர்பாக செய்முறை விளக்கம் மற்றும் புத்தாக்க பயிற்சியினை தொடங்கி வைத்து, சத்துணவு அமைப்பாளர்களுக்கு சத்துணவு பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கையேடுகளை வழங்கினார். பயிற்சியில் 2016, 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 246 சத்துணவு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது;-

சுத்தமாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,494 சத்துணவு மையங்கள் உள்ளன. இதன்மூலம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 458 குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் அளிப்பது அவசியமாகும்.

சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் முன்கூட்டியே சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தயார் செய்ய வேண்டும். மேலும், சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள் உணவுகளை சுத்தமாக தயார் செய்வது குறித்தும், சுகாதாரமாக மையங்களை வைத்துக்கொள்வது குறித்தும் சமையல் கலை வல்லுனர்களால் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் காய்கறி தோட்டம்

இந்த பயிற்சியில் தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி சத்துணவு அமைப்பாளர்கள் உணவு வகைகளை நன்றாக சமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50 பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் விளையும் காய்கறிகளை சத்துணவு அமைப்பாளர்கள் சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜோதிலைலாம்பிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்