கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிவாரண தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் ஜி.கே.மணி பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிவாரண தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-11-22 22:45 GMT
கிருஷ்ணகிரி,

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் சகஜ நிலைக்கு வரவில்லை. அங்கு குடிநீர் வசதி, மின்சார வசதி கிடைக்கவில்லை. 2½ லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் போதிய அளவு இல்லை. தமிழக அரசு இந்த விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் உடனடியாக தமிழகம் வந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் மட்டும் 173 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. இந்த நீரை கால்வாய்கள் மூலமாக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எண்ணேகொல்புதூர் - படேதலாவ் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி அணையில் தென்பெண்ணை ஆற்று நீரை முழுமையாக தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை பெருக்க இந்த பகுதியில் கனரக தொழிற்சாலை உருவாக்க வேண்டும். மேலும் ஓசூர் விமான நிலைய அறிவிப்பை செயல்படுத்திட வேண்டும். கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை மோசமாக உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் அங்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், மாவட்ட செயலாளர் அக்னி சுப்பிரமணி, நிர்வாகிகள் மாதேஸ்வரன், முனிராஜ், கணேசன், வெங்கடேஷ், பாலாஜி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்