‘கஜா’ புயலால் பலத்த சேதம்: கொடைக்கானலில் சீரமைப்பு பணிக்கு ரூ.30 கோடி - அரசிடம் நகராட்சி நிர்வாகம் கேட்கிறது
கொடைக்கானலை புரட்டி போட்ட ‘கஜா’ புயலின் காரணமாக சீரமைப்பு பணிக்கு ரூ.30 கோடி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார்.
கொடைக்கானல்,
‘கஜா’ புயல் கொடைக்கானலை புரட்டி போட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மரங்கள் அப்புறப்படுத்தாமல் இருக்கிறது. இதுதவிர மேல்மலைக் கிராமங்களில் சில பகுதிகளில் இன்னும் மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை.
கொடைக்கானல்-வத்தலக் குண்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மலைப்பாதையில் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதுமட்டுமன்றி மழைக்கு நகரின் பல இடங் களில் சாலைகள் படுமோசமானது.
பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட மேல்மலைக்கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் நாசமடைந்தன. கீழ்மடைப்பள்ளம் ஏரி உடைந்ததால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. இதுவரை இல்லாத அளவுக்கு கொடைக்கானல் பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சேத விவரங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் டோபிகானல் என்னுமிடத்தில் நட்சத்திர ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் வாய்க்காலில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
கொடைக்கானல் நகர் பகுதியில் விழுந்த மரங்களில் 95 சதவீதம் அகற்றப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நட்சத்திர ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் வழிகளில் உள்ள கழிவுகள், குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக நகரில் 38 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை சேதம் அடைந்துள்ளது. 12 சிறிய பாலங்கள், 4 இடங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் 264 மின் விளக்குகளும், 2 கட்டிடங் களும் சேதம் அடைந்துள்ளன. இதனை நிரந்தரமாக சீரமைக்க ரூ.30 கோடி செலவாகும். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும். அதுவரை தற்காலிகமாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.