ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி சிறப்பு மலைரெயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு மலைரெயிலில் பயணம் செய்தனர்.

Update: 2018-11-21 22:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை, இங்கிலாந்து நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு வருபவர்கள் ஊட்டி மலைரெயிலில் பயணிக்க தவறுவதில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் தம்பதி ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தி மலைரெயிலில் பயணித்தனர். அவர்களுக்கென தனியாக சிறப்பு ரெயில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்ட்டின், சூஹோ, ஆர்தர் கில்பர்ட், சூசின் ஹில்சன், டாம், ஸ்டீவர்ட், ஜான், ஹின் ஆகிய 8 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தது. இந்த குழுவினர் சிம்லா, டெல்லி, ஆக்ரா, மும்பை போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, நீலகிரிக்கு வர முடிவு செய்தனர். அதன்படி மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர். அங்கிருந்து ரெயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்த அவர்கள், ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி மலைரெயிலில் பயணிக்க பதிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கென தனியாக சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரெயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து அந்த ரெயில் வெளிநாட்டு சுற்றுலா குழுவினருடன் புறப்பட்டது. தொடர்ந்து மதியம் 1.20 மணியளவில் குன்னூரை அடைந்தது. அங்கு அவர்கள் ரெயில் நிலையம் அருகில் உள்ள லோகா பணிமனைக்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைரெயில் என்ஜின்களை கண்டு ரசித்தனர். அதன்பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவை சுற்றி பார்க்க வந்தோம். நீலகிரி எங்கள் நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருக்கும் என்றும், மலைரெயில் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கேள்விப்பட்டோம். ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் சிறப்பு ரெயில் எங்களுக்காக இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும்போது நீர்வீழ்ச்சி, பசுமை போர்த்திய மலைகள், பாலங்கள், குகைகளை கண்டு ரசித்தோம். குன்னூரில் சீதோஷ்ண நிலை ரம்மியமாக உள்ளது. இந்த சுற்றுலாவையும், மலைரெயில் பயணத்தையும் மறக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்