‘கஜா’ புயல் பாதிப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சேகரிக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-21 22:00 GMT
சென்னை, 

கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சேகரிக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.

நிவாரண பொருட்கள்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் நிவாரண பொருட் கள் சேகரிக்கும் பணியை அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் தொடங்கி வைத்ததுடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தானும் அப்பணியில் ஈடுபட்டார்.

அவருடன் கட்சியின் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்லம் பாட்ஷா, மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி வியாபாரிகளிடம் நிவாரண பொருட்களை திரட்டினர்.

புரசைவாக்கத்தில் அமைந்துள்ள ‘வசந்த் அன் கோ’ கடையில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட பொருட்கள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சத்தியமூர்த்திபவன் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நிவாரணம் எவ்வளவு?

இந்த நிகழ்ச்சியின் போது சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டினோம். ஆனால் புயல் பாதிப்புக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. புயலில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்துக்கான நிவாரண நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். மேலும் மத்திய அரசு புயல் நிவாரணத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘கஜா’ புயலுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பது குறித்து அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியிடம் ஆலோசிப்பதற்காக நாளை (இன்று) டெல்லி செல்ல உள்ளேன். ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ? அதன்படி நிவாரண தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்