மீனவர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு; முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-11-21 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. இணை செயலாளருமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மீனவர்கள் உலக பொருளாதாரத்திற்கும், சமுதாயத்துக்கும் ஆற்றும் அரிய பங்கினை நினைவு கூறவும், பாராட்டுவதற்கும் நவம்பர் 21–ந்தேதியை பல உலக நாடுகள் உலக மீனவர் தினமாக கொண்டாடுகின்றன. அவர்களது தொழிலும், பொருளாதார வருமானமும் சமூக அந்தஸ்தும் உயர உலக அரசுகள் நல்ல திட்டங்களை செயல்படுத்த தீர்மானம் கொள்ள வேண்டும்.

உலக மீனவர் தினத்தை கொண்டாடும் வேளையில் இயற்கையின் சீற்றத்தால், கஜா புயலால் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணத்தையும், மறுவாழ்வுக்கான புனரமைப்பு பணிகளையும் அரசுகள் விரைவாக செய்து முடிக்கவேண்டும். ஒரு புயலில் இருந்து மீள்வதற்குள் அடுத்த கடல்சீற்றம் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு முனைப்பு காட்டவேண்டும்.

புதுவையை பொறுத்தவரை 3–வது பெரிய சமுதாயமாக இருக்கும் மீனவர்கள் புதுவையின் பொருளாதார வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும், மாநில வருமானத்துக்கும், வேலைவாய்ப்பிற்கும், உணவு ஆதாரத்திற்கும், ஏற்றுமதிக்கும் மிகப்பெரிய பங்கு ஆற்றுகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இதுவரை பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஒரு அடி முன்னேறினால் 4 அடிகள் அவர்கள் கீழே இறக்கப்படுகின்றனர்.

மீனவர்களுக்கான தொழில் பயிற்சி, மீனவர் நலவாரியம் அமைத்தல், கடனுதவி, மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தை புதுப்பித்தல், அவர்களுக்கான கல்வி, வேலை, இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்துதல், மீன்வள கல்லூரி ஒன்றை புதுவையில் நிறுவுதல், நிலுவையில் உள்ள மீனவர் நிவாரணங்களை வழங்குதல், மீனவர்களுக்கு என்று மத்தியில் ஒரு தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளில் புதுவை அரசு உடனடியாக எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்