சித்தராமையாவுடன் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி திடீர் சந்திப்பு டி.கே.சிவக்குமார் மீது குற்றச்சாட்டு
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை நேற்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி திடீரென்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை நேற்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அவர், பெலகாவி பிரச்சினைகளில் மந்திரி டி.கே.சிவக்குமார் மீண்டும் தலையிடுவதாக குற்றச்சாட்டு கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி இருந்து வருகிறார். இவருக்கும், மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது. பெலகாவியில் நடந்த கூட்டுறவு வங்கி தேர்தலில் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக மந்திரி டி.கே.சிவக்குமார் செயல்பட்டதாக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, அவரது சகோதரரான சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் குற்றச்சாட்டு கூறினர். பின்னர் ரமேஷ் ஜார்கிகோளி, சதீஸ் ஜார்கிகோளியிடம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
அத்துடன் பெலகாவி அரசியல் விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் தலையிடக்கூடாது என்று மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று சித்தராமையாவை திடீரென்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி சந்தித்து பேசினார். அப்போது அரை மணிநேரத்திற்கும் மேலாக 2 பேரும் பேசினார்கள்.
டி.கே.சிவக்குமார் மீது குற்றச்சாட்டு
இந்த சந்திப்பின்போது பெலகாவியில் நடக்கும் பிரச்சினைகளில் மந்திரி டி.கே.சிவக்குமார் மீண்டும் தலையிடுவதாக சித்தராமையாவிடம் ரமேஷ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பெலகாவியில் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொைகயை பெற்றுக் கொடுக்க கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் பெங்களூருவில் கரும்பு விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டதுடன், விவசாயிகளுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பெலகாவி பொறுப்பு மந்திரியாக இருந்து கொண்டு கரும்பு விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொள்ளாதது பற்றி முதல்-மந்திரி குமாரசாமியிடம் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி அறிந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, பெலகாவி பிரச்சினைகளில் மந்திரி டி.கே.சிவக்குமார் மீண்டும் தலையிடுவதாகவும், அவ்வாறு அவர் தலையிட்டால் விபரீத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் சித்தராமையாவிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெலகாவியை சேர்ந்தவருக்கு...
அதே நேரத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால் பெலகாவியை சேர்ந்தவருக்கு கண்டிப்பாக மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் ரமேஷ் ஜார்கிகோளி வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, மந்திரி டி.ேக.சிவக்குமாரை அழைத்து பேசுவதாக ரமேஷ் ஜார்கிகோளியிடம் சித்தராமையா உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.