பூந்தமல்லி அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது
பூந்தமல்லி அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்தியகிரிராவ்(வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரியா(26). இவர்களுக்கு லோகேஷ்(5), சர்வேஷ்(3) என 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பாரிவாக்கம், கங்கை அம்மன் கோவில் குளம் அருகே உள்ள மரத்தடியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த சத்தியகிரிராவை ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆட்டோ நிறுத்தும் இடத்தில் உள்ள சக ஆட்டோ டிரைவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர்களான அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த பூபாலன்(27), சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஷபீர்(24), பாலாஜி (37), ஆவடியை சேர்ந்த அஜீத் என்ற ஜெகநாதன்(25), திருமுல்லைவாயலை சேர்ந்த ஜார்ஜ் என்ற விஜய்பாபு(30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சத்தியகிரிராவ், ஆவடி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் ஆட்டோ ஓட்டிவந்தார். ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளராகவும் இருந்து வந்தார். கைதான 5 பேரும் அதே ஆட்டோ நிறுத்தும் இடத்தில்தான் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
சத்தியகிரிராவ், அங்கு ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் சிலரிடம் அடிக்கடி அவர்களது சட்டை பையில் உள்ள பணத்தை வலுக்கட்டாயமாக எடுத்து கொள்வார். எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார்.
சத்தியகிரிராவ் மீது ஏற்கனவே கொலை வழக்குகளும் இருந்ததால் ஆட்டோ டிரைவர்களும் அவரை பார்த்து சற்று பயந்து போய் இருந்தனர். இதனால் மற்ற ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது.
இதனால் சத்தியகிரிராவை தீர்த்து கட்டினால்தான் இனி அந்த பகுதியில் தொல்லை இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியும் என சக ஆட்டோ டிரைவர்கள் முடிவு செய்தனர். சம்பவத்தன்று இதுதொடர்பாக சத்தியகிரிராவிடம் பேசுவதற்காக சென்றனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் சத்தியகிரிராவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.