வாக்குப்பெட்டிகளை அ.தி.மு.க.வினர் தூக்கி சென்றதாக புகார்: கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

வாக்குப்பெட்டிகளை அ.தி.மு.க.வினர் தூக்கி சென்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-20 21:45 GMT
வத்தலக்குண்டு, 

வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கியில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் தலா 11 பேரும், சுயேட்சையாக 8 பேரும் என மொத்தம் 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்பிறகு அதே மாதம் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

அப்போது அ.தி.மு.க. பிரமுகர் ஜெயபாண்டி திடீரென வாக்குப்பெட்டிக்குள் மையை ஊற்றியதாக தெரிகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 6 வாக்குப்பெட்டிகளும் நகர வங்கிலேயே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்தநிலையில் வாக்குகளை உடனடியாக எண்ணி தேர்தல் முடிவினை அறிவிக்க வேண்டும் என தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. தரப்பில் தேர்தலை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருவரது மனுக்களையும் விசாரணை செய்த ஐகோர்ட்டு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அதன்பேரில் கோவையை தலைமையிடமாக கொண்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை ஆய்வு செய்வதற்கு நேற்று வத்தலக்குண்டுவுக்கு வந்தனர்.

ஆனால் வாக்குப்பெட்டியை அ.தி.மு.க.வினர் தூக்கி சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு குவிந்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் தான் வந்துள்ளனர் என்பதை தெரிந்தவுடன் தி.மு.க.வினர் சமாதானம் அடைந்தனர்.

அதன்பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வங்கியில் இருந்த 6 வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகள் காரில் ஏற்றி கோவைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வாக்குப்பெட்டிகளை மாற்றி விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் சென்ற காரின் பின்னே தி.மு.க.வினர் 2 கார்களில் கோவை வரை சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்