ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வாலிபர் கைது: பெங்களூருவை சேர்ந்தவர்

ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த பெங்களூருவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-20 22:00 GMT
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி தலைமையில், ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெங்களூரு தாசரஹள்ளி பகுதியை சேர்ந்த வாசிம் என்கிற ஆனந்த் (வயது 26) என்பதும், சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமும், ஓடும் ரெயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளிடமும் நகை, பணம், செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் வாசிம் மீது 16 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 5 பவுன் நகை, 12 செல்போன்கள் மற்றும் 2 மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்