கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை: 86 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து
கோவில்பட்டியில் அதிரடி சோதனை நடத்தி 3 கடைகளில் இருந்த 86 கிலோ புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் அதிரடி சோதனை நடத்தி 3 கடைகளில் இருந்த 86 கிலோ புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன் ராஜா, நாக சுப்பிரமணியன், சிவபாலன், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், முத்தானந்தபுரம் தெரு, பண்ணைத்தோட்ட தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் இருந்த 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் ஆகும். மேலும் கடைகளில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து
மேலும் 3 கடைகளில் இருந்த உணவுப்பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து, ஆய்வக பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் அந்த கடைகளின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரையிலும் அந்த கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.