நடிகர் சல்மான்கானின் செல்போன் நம்பரை கேட்டு உதவியாளரை மிரட்டியவர் பிடிபட்டார்

நடிகர் சல்மான்கானின் செல்போன் நம்பரை கேட்டு அவரது உதவியாளரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-20 00:26 GMT
மும்பை,

இந்தி நடிகர் சல்மான்கானின் உதவியாளர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஏற்று அவர் பேசினார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய ஆசாமி ஒருவர், தான் சல்மான்கானிடம் பேச விரும்புவதாக கூறி அவரது செல்போன் நம்பரை தரும்படி கேட்டு உள்ளார்.

இதற்கு உதவியாளர் மறுத்தார். இதனால் கோபம் அடைந்த அந்த ஆசாமி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சல்மான்கானின் உதவியாளரை மிரட்டிய ஆசாமி அலகாபாத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த செல்போன் நம்பர் செரா என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் அலகாபாத் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது, செரா அண்மைகாலம் வரையிலும் பாந்திரா பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது.

சல்மான்கானின் உதவியாளர் செல்போன் நம்பரை இணையதளத்தில் இருந்து எடுத்ததாக கூறினார். என்ன காரணத்துக்காக சல்மான்கானின் செல்போன் நம்பரை கேட்டார் என்பதை கண்டறிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்